200 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து தம்பதி உள்பட 3 பேர் படுகாயம்

குன்னூர் அருகே 200 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து தம்பதி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-04-06 14:04 GMT
குன்னூர்

குன்னூர் அருகே 200 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து தம்பதி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விரிவாக்க பணிகள்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 21 இடங்களில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக சாலையோரங்களில் ஆங்காங்கே கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சில நேரங்களில் விபத்துகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 54). ஊட்டி மகளிர் கோர்ட்டில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உமா மகேஸ்வரி(46). ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

பள்ளத்தில் பாய்ந்தது

இவர்கள் இன்று பாய்ஸ் கம்பெனியில் இருந்து காரமடைக்கு தங்களது காரில் புறப்பட்டனர். காரை டிரைவர் ஜாகீர் உசேன்(வயது 53) ஓட்டினார். குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்காவை கடந்து சென்றபோது, ஒரு வளைவில் கார் திரும்பியது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. தொடர்ந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 200 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து. மேலும் மலைரெயில் பாதையில் உருண்டு விழுந்தது.

3 பேர் படுகாயம்

இந்த விபத்தில் கண்ணன், உமா மகேஸ்வரி, ஜாகீர் உசேன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து குன்னூர் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. 

அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், காருக்குள் சிக்கி இருந்த 3 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்னூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்