சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பெரிய சூண்டியில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2022-04-06 14:04 GMT
கூடலூர்

பெரிய சூண்டியில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சித்தி விநாயகர் கோவில்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பெரிய சூண்டியில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா, கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், மாலை 5 மணிக்கு கல்யாண மலை முருகன் கோவிலில் இருந்து மேள-தாளங்கள் முழங்க தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

இதையடுத்து மாலை 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜையும், அனுக்ஞை, பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு முதல் கால யாக பூஜை நடைபெற்றது. 9.30 மணிக்கு கோபுர கலசம் ஸ்தாபனம் மற்றும் சுவாமி பிரதிஷ்டை நடைபெற்றது. 

புனித நீர் ஊற்றி...

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு விஸ்வ சகஸ்ரநாம பாராயணம், 2-ம் கால யாக பூஜை மற்றும் ஹோமங்கள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேள-தாளங்கள் முழங்க யாக சாலையில் இருந்து தீர்த்த கலச புறப்பாடு நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சித்தி விநாயகர் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தரிசித்தனர்.தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 

பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோபூஜை, தச தானம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்