சொத்துவரியை ரத்து செய்ய வேண்டும்; விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
சொத்துவரி, வீட்டுவரி உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கீழ்பென்னாத்தூர்
சொத்துவரி, வீட்டுவரி உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் விரிவாக்க மையம் சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) குமரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பத், பரமேஸ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம், தோட்டக்கலை உதவி இயக்குனர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வேளாண் உதவி இயக்குனர் சந்திரன் வரவேற்றார்.
சொத்துவரியை ரத்து செய்ய வேண்டும்
கூட்டத்தில் சொத்துவரி, வீட்டுவரி உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும். கரும்பு நிலுவை தொகை வழங்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு தராசு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வரை வசூலிப்பதை தடுக்க வேண்டும். யூரியா தட்டுப்பாடு போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
அதைத் தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், கால்நடை உதவி மருத்துவர் ஆனந்தன், மார்க்கெட் கமிட்டி சூப்பிரண்டு சுரேஷ்பாபு, பேரூராட்சி இளநிலை உதவியாளர் தனமல்லி ஆகியோர் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர்.
இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பழனிசாமி, மணிகண்டன், சதாசிவம், அட்மா ஆலோசனை குழுத்தலைவர் சிவக்குமார், சுப்பிரமணி, வரதராஜன், துரைராஜ், பாரதியார், தெய்வானை உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதவி வேளாண் அலுவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டம்
கூட்டம் முடிந்த பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திராவிட விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முத்தகரம் பழனிசாமி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், யூரியா தட்டுப்பாட்டை போக்கவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.