கஞ்சா கடத்தல்- சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கைது
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாக்பூர்,
தென்கிழக்கு மத்திய ரெயில்வேயின் நாக்பூர் பிரிவை சேர்ந்த ரெயில்வே பாதுகாப்பு படை(ஆர்.பி.எப்.) சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டரான ராம்சிங் மீனா(வயது 30) என்பவர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் அவரது வீட்டில் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பலுடன் இணைந்து அவர் செயல்பட்டு வந்தது விசாரணையில் உறுதியானது.
இவர் கொடுத்த தகவலின் பேரில் அருண் ராஜ்குமார் தாக்கூர்(28), அபிஷேக் லலித் பாண்டே(19), பூண்டி குப்தா(30) மற்றும் குஷ் மாலி(23) ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் சூரஜ் திவாரி மற்றும் அமன் ஆகிய 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.