திருப்பத்தூர் அருகே ஜல்லி கொட்டி 15 மாதங்கள் ஆகியும் சாலை அமைக்காததால் பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர் அருகே ஜல்லி கொட்டி 15 மாதங்கள் ஆகியும் சாலை அமைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2022-04-06 11:06 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே ஜல்லி கொட்டி 15 மாதங்கள் ஆகியும் சாலை அமைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சாலை அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு

திருப்பத்தூர் அருகே இலக்கிநாயக்கன்பட்டி முதல் பதனவாடி வரை 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு திருப்பத்தூர்தான் வரவேண்டும், இலக்கிநாயக்கன்பட்டி முதல் பதனவாடி வரை உள்ள 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை மிகவும் மோசமாக இருந்ததால் பொதுமக்கள் புதிதாக சாலை அமைக்க கோரிக்கை விடுத்து இருந்தனர். 

அதன்படி பிரதமமந்திரி கிராம சாலை திட்டத்தின் மூலம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 11.1.2021 அன்று பணி தொடங்கப்பட்டது. பணி தொடங்கியதும் புதிய சாலை அமைப்பதற்காக சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. 

பணிகள் தொடங்கவில்லை

அதன்பிறகு இதுவரை சாலை அமைக்கும் பணி நடைபெற வில்லை. ஜல்லி கற்கள் கொட்டி 15 மாதங்கள் ஆகியும்சாலை அமைக்கப்படாததால் இப்பகுதி மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு கீழே விழும் நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் நடந்துகூட செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சாலை அமைப்பதை காரணம் காட்டி அப்பகுதிக்கு செல்லக்கூடிய டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் சாலை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் சென்று கேட்கும் போதெல்லாம் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கிவிடும் என கூறி 2 நாட்கள் வேலை செய்து அதன்பின் வேலை நடப்பது கிடையாது. இந்த சாலை அமைக்கும்பணி கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை பணி தொடங்கப்படவே இல்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். இல்லையெனில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்