‘சொத்து வரியை உயர்த்தி விட்டு மத்திய அரசு மீது பழிபோடுகிறார்கள்’-ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
சொத்து வரியை உயர்த்தி விட்டு மத்திய அரசு மீது பழிபோடுகிறார்கள் என்று ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டினார்.
மதுரை,
சொத்து வரியை உயர்த்தி விட்டு மத்திய அரசு மீது பழிபோடுகிறார்கள் என்று ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டினார்.
ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக பெத்தானியாபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. ஒரு படத்தில் நடிகர் வடிவேலு, காலையில் பெற்றோரின் காலை தொட்டு வணங்குவார். ஆனால் மாலையில் மதுகுடித்து விட்டு வந்து பெற்றோரை அடிப்பார். அதே போல் தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் கனிவாக பேசிய தி.மு.க., இப்போது ஆட்சிக்கு வந்ததும் கொடுங்கோலாக நடந்து கொள்கிறது. ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்து என்பார்கள். அது போல தி.மு.க. ஆயிரக்கணக்கான பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டார்கள். அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். தேர்தலின் போது பெட்ரோல் விலையை குறைப்போம், மாதந்தோறும் குடும்ப பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ.1000 தருவோம், சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருவோம் என இனிக்க, இனிக்க வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் அதனை மறந்து விட்டார்கள். நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை. கெட்டது செய்யாமல் இருக்கலாம் அல்லவா? ஆனால் தி.மு.க. சொத்து வரி உயர்வு உள்பட தொடர்ந்து மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது.
தாலிக்கு தங்கம்
தமிழகத்தில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணைத்தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. ஆட தெரியாதவன் மேடை கோணல் என்றானாம். அது போல நிர்வாகம் தெரியாமல் நிதி இல்லை, அது இல்லை என்று சாக்குபோக்கு கூறி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் ஆகிய மக்கள் நல திட்டங்களை தி.மு.க. முடக்கி போட்டு விட்டது. கொரோனா காலத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு தற்போது அனைத்து துறைகளிலும் மோசமாக செயல்படுகிறது.
சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று அமைச்சர் நேரு கூறுகிறார். மேலும் அவர், பிப்ரவரி மாதம் 31-ந் தேதிக்குள் சொத்து வரியை உயர்த்தாவிட்டால், மானியத்தை தர மாட்டோம் என்று மத்திய அரசு கூறியதாக கூறுகிறார். ஆனால் பிப்ரவரியில் ஏது 31-ந் தேதி? இதில் இருந்தே அமைச்சர் பொய் சொல்கிறார் என்று தெரிகிறது. வரியை உயர்த்தி விட்டு மத்திய அரசு மீது பழியை சுமத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.