பெங்களூருவில், இருசக்கர வாகனங்களை திருடிய என்ஜினீயர் உள்பட 7 பேர் கைது

பெங்களூருவில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் ஆந்திராவை சேர்ந்த என்ஜினீயர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-05 21:10 GMT
பெங்களூரு:

வாகன சோதனை

  பெங்களூரு பனசங்கரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தியாகராஜநகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் ராஜேசின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து ராஜேஸ் அளித்த புகாரின்பேரில் பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர்.

  இந்த நிலையில் பனசங்கரி போலீசார் உத்தரஹள்ளி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் 7 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் வந்த வாகனங்களுக்கும் உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

7 பேர் கைது

  அப்போது 7 பேரும் சேர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த விஜய் பண்டி(வயது 25), ஹேமந்த்(27), குணசேகர் ரெட்டி(30), பானுமூர்த்தி(25), புருஷோத்தம் நாயுடு(30), கார்த்திக் குமார்(27), கிரண்குமார்(23) என்பது தெரியவந்தது.

  இவர்களில் விஜய், மெக்கானிக்கல் என்ஜினீயர் ஆவார். மற்ற 6 பேரும் பட்டதாரிகள். 7 பேரும் யூ-டியூப்பில் வீடியோக்களை பார்த்து மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது.

29 வழக்குகளுக்கு தீர்வு

  மேலும் திருடிய வாகனங்களை ஆந்திராவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஒரு ஸ்கூட்டர் உள்பட பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 30 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர்.

  அதன்மதிப்பு ரூ.68 லட்சம் ஆகும். இவர்கள் கைதாகி இருப்பதன் மூலம் கே.ஆர்.புரம், பனசங்கரி, சுப்பிரமணியபுரா, சி.கே.அச்சுக்கட்டு, குமாரசாமி லே-அவுட், ஜெயநகர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 29 திருட்டு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. கைதான 7 பேர் மீதும் பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்