ரெயிலில் கடத்திய 7½ கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக கேரள மாநிலத்துக்கு ரெயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சூரமங்கலம்:-
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் தன்பாத் -ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-13351) நேற்று காலை பொம்மிடி-சேலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே போலீசார் கண்ணன், சக்திவேல், கவியரசு, சென்னகேசவன், சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த ரெயிலில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில், டி.எல்-1 என்ற பெட்டியில் சோதனை செய்தபோது கேட்பாரற்று கைப்பை ஒன்று கிடந்தது. அந்த கைப்பையை போலீசார் சோதனை செய்ததில், 7½ கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கஞ்சாவை கைப்பற்றி, சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.