சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்சென்ற டிரைவருக்கு அபராதம்
சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்சென்ற டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணம் செய்த 13 பெண்கள் பலியானார்கள். இதனால் சரக்கு வாகனத்தில் பொதுமக்கள் பயணம் செய்தால், அதை போலீசார் கண்காணித்து தடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் பெருந்துறை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன், மகேந்திரன், மோகன்ராஜ், முத்துசாமி ஆகியோர் பெருந்துறை நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது ஆட்களை ஏற்றிக்கொண்டு அந்த வழியாக ஒரு சரக்கு வாகனம் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி ஆட்களை இறக்கிவிட்டார்கள். மேலும் அதன் டிரைவருக்கு ரூ.1000 அபராதம் விதித்தார்கள். இதேபோல் நேற்று 5 சரக்கு ஆட்டோக்கள் பிடிபட்டன.
மேலும், தனியார் பஸ் படிக்கட்டில் மாணவர்களை பயணம் செய்ய அனுமதித்த கண்டக்டருக்கு ரூ.600 அபராதம் விதிக்கப்பட்டது. .இது தவிர ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற 225 பேருக்கு தலா ரூ.100 அபராதம் என ரூ.22 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 5 பேருக்கு தலா ரூ.100 என ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.26 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.