மரத்தில் லாரி மோதி கவிழ்ந்ததில் 2 வாலிபர்கள் பலி

மரத்தில் லாரி மோதி கவிழ்ந்ததில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

Update: 2022-04-05 20:02 GMT
பெரம்பலூர்:

மேடை நிகழ்ச்சிக்காக சென்றனர்
விழுப்புரம் ஏ.பி. குப்பம் பகுதியை சேர்ந்த அசோக்கின் மகன் அன்பு (வயது 27). இவர் அரியலூர் மாவட்டம் தளவாய் வடக்கு சிலுப்பனூர் ஏரிக்கரை தெருவை சேர்ந்த அரவிந்த் (24), திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி மாத பூண்டி நடுத்தெருவை சேர்ந்த நவீன்(25), கோவில்பட்டி லட்சுமிபுரம் கோவில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (28) ஆகிய 4 பேரும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை அசோக் நகரை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான மினி லாரியில் சென்னையில் இருந்து இசைக்கருவிகள் மற்றும் ஒளி, ஒலி உபகரணங்களை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு மேடை நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தனர். இதில் டிரைவர் அரவிந்த் லாரியை ஓட்டினார். மற்ற 3 பேரும் முன் பக்க கேபினில் அமர்ந்திருந்தனர்.
2 பேர் சாவு
நேற்று அதிகாலை பெரம்பலூர் புறநகர் பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி எதிரே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, அங்குள்ள புளியமரத்தின் மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் மினி லாரி கவிழ்ந்தது. இதில் லாரியின் முன்பகுதி உருக்குலைந்தது.
இந்த விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி அன்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் படுகாயம் அடைந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அரவிந்த் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்