கார் விபத்து நடந்த இடத்தை போலீஸ் அதிகாரி ஆய்வு

கார் விபத்து நடந்த இடத்தை போலீஸ் அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2022-04-05 20:02 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மலையப்ப நகர் பிரிவு சாலை பகுதியில், கடந்த 3-ந்தேதி லாரியும் காரும் மோதிக் கொண்ட விபத்தில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையின் நடுவே அப்பகுதியில் மலையப்ப நகர் பிரிவு சாலைக்கு செல்ல தடுப்புச்சுவர் இல்லாமல் இருந்ததால், வாகனங்கள் முறையின்றி சாலையை கடக்க முயற்சிப்பதாக புகார்கள் எழுந்ததால், அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே தடுப்புச்சுவர் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்தும், விபத்து நடந்தது எப்படி என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள சென்னையில் இருந்து, மாநில புலனாய்வு துறை போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வாங்கிடே அங்கு வந்து, விபத்து நடத்தை இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் தடுப்பச்சுவர் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார். மேலும் இதுபோன்ற பிரிவு சாலை உள்ள பகுதிகளில் ஒளிரும் விளக்குகள் மற்றும் சாலையில் குறியீடுகள் அமைக்க வேண்டும் என்று சாலை பராமரிப்பு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு அலுவலர் உத்தாண்டி, உதவி பொறியாளர் ஆறுமுகம், தேசிய நெடுஞ்சாலை ஆய்வாளர் சுரேஷ், உதவி கேட்ட பொறியாளர் மாயவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்