தி.மு.க. அரசு பெண்களுக்கு உறுதுணையாக உள்ளது - சபாநாயகர் அப்பாவு

தி.மு.க. அரசு பெண்களுக்கு உறுதுணையாக உள்ளது என்று பாளையங்கோட்டை கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசினார்.

Update: 2022-04-05 19:06 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் 127-வது ஆண்டு விழா நடந்தது. பேராயர் பர்னபாஸ் தலைமை தாங்கினார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை திருமண்டல ‘லே’ செயலாளர் டி.எஸ்.ஜெயசிங், கல்லூரி தாளாளர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் வளர்மதி வரவேற்று பேசினார். முதல்வர் கல்லூரி உஷா காட்வின் ஆண்டறிக்கை வாசித்தார். சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்வியில் சிறந்த மாணவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள் கல்வி கற்றால்தான் சமுதாயம் முன்னேறும். நாடு முன்னேற்றம் அடையும். எனவேதான் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தற்போது கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். மேலும் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தி.மு.க. அரசு பெண்களுக்கு உறுதுணையாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் திருமண்டல பொருளாளர் மனோகர், திருமண்டல பள்ளிகளின் மேலாளர் புஷ்பராஜ், மாவட்ட கவுன்சிலர் கரிசல் சாலமன் டேவிட், முன்னாள் மேயர் விஜிலா சத்யானந்த், ஜெபராஜ், பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி தாளாளர் அலெக்சாண்டர் சோமு, மாநகராட்சி கவுன்சிலர் சகாயமேரி ஜூலியட் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.

மேலும் செய்திகள்