கோழிப்பண்ணைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு: போலீஸ் பாதுகாப்புடன் மின்கம்பங்கள் நடப்பட்டன
போலீஸ் பாதுகாப்புடன் மின்கம்பங்கள் நடப்பட்டன.
எலச்சிபாளையம்:
எலச்சிபாளையம் அருகே மொரங்கம் சுண்டாங்கிபாளையம் அருந்ததியர் காலனியில் பழனிவேல் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழிப்பண்ணைக்கு உயர் அழுத்த மின்சார வசதி கேட்டு அவர் விண்ணப்பித்தார். ஆனால் அந்த பகுதி பொதுமக்கள், தங்களது குடியிருப்புகள் வழியாக உயர் மின் அழுத்த கம்பங்கள் நட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவருடைய கோழிப்பண்ணைக்கு மின்சார வசதி செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து பழனிவேல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த கோர்ட்டு மின்சார வசதி ஏற்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று மின்சார வாரியம் சார்பில் சுண்டாங்கிபாளையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் மின்கம்பங்கள் நடப்பட்டன. அங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர்.