போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
கரூர்,
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் சப்-இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் பதவிக்கான 444 பணி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இணையவழியில் (www.tnusrb.tn.gov.in) நாளை (வியாழக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். இப்போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தொகுதி 2, 2-ஏ, 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இந்த அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தொலைதூரத்தில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் அலுவலகத்திற்கு நேரில் வர இயலாதவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பாகும். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள கரூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வேலைநாடுபவர்கள் கரூர் மாவட்டம், வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது அலுவலக தொலைபேசி எண்.04324- 223555 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.