கடன் அட்டை உச்சவரம்பை அதிகரிப்பதாக கூறி தலைமை ஆசிரியரிடம் ரூ 48 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்

தர்மபுரியில் கடன் அட்டை உச்சவரம்பை அதிகரிப்பதாக கூறி தலைமை ஆசிரியரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.48 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

Update: 2022-04-05 18:13 GMT
தர்மபுரி:
தர்மபுரியில் கடன் அட்டை உச்சவரம்பை அதிகரிப்பதாக கூறி தலைமை ஆசிரியரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.48 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
ஆசிரியர்
தர்மபுரி மாவட்டம் செட்டிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாகவும், கடன் அட்டை உச்சவரம்பை அதிகரிக்க விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து ஆசிரியர் தனது கடன் அட்டை எண் மற்றும் ஓ.டி.பி. விவரங்களை அந்த நபரிடம் தெரிவித்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவருடைய கடன் அட்டையில் இருந்து ரூ.48 ஆயிரத்து 474 மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பழகன் இது குறித்து சைபர் கிரைம் உதவி எண்ணான 1930-ஐ தொடர்பு கொண்டு பண மோசடி குறித்த புகாரை பதிவு செய்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட கணக்கில் பண பரிவர்த்தனையை முடக்கி ரூ.48 ஆயிரத்து 474 ஐ மீட்டனர். இந்த பணத்தை தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், அன்பழகனிடம் ஒப்படைத்தார்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:- 
ஏமாறக்கூடாது
இதுபோன்ற பண மோசடி புகார்களை உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும். போலியான அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் நம்பி பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், கடன் அட்டை எண், ஆதார் எண், ஓ.டி.பி. எண் ஆகியவற்றை செல்போனில் யாரிடமும் சொல்ல கூடாது. 
உங்கள் செல்போன் எண் லட்சக்கணக்கிலான பரிசு தொகைக்கு தேர்வாகி உள்ளது. குறைந்த வட்டியில் அதிக கடன் தருகிறோம் என்று வரும் குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு, இ-மெயில், வாட்ஸ் அப்பில் வரும் லிங்குகளை நம்பி ஏமாற கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்