அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் மீது வழக்கு

கோவை அருகே பள்ளி மாணவனை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாக அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-05 17:51 GMT
பேரூர்

கோவை அருகே பள்ளி மாணவனை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாக அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவறையை சுத்தம் செய்த மாணவன்

கோவை மாவட்டம் பேரூர் அருகே செம்மேடு பகுதியில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக பேரூர் நஞ்சமநாயுடு லேஅவுட் பகுதியை சேர்ந்த ஜெயந்தி (வயது 53) பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் பள்ளியில் 3-ம் வகுப்பில் பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் படித்து வந்தான். கடந்த 29-ந் தேதி அந்த மாணவனை பள்ளி ஆசிரியர்கள், கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. 

அதிகாரிகள் விசாரணை 

இதுகுறித்து அறிந்த 3-ம் வகுப்பு மாணவனின் தாயார் பள்ளி ஆசிரியர்களிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது ஆசிரியர்கள், அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவனின் தாயார், தனது மகனை அரசு பள்ளி  ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி கழிவறை சுத்தம் செய்ய வைத்தாக கூறி ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.  

இந்த புகாரின் பேரில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு, ஆலாந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் செம்மேடு அரசு பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். 

தலைமை ஆசிரியை மீது வழக்கு

இதில் பள்ளியில் மாணவனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததுடன், மாணவனின் தாயை அவமரியாதையாக பேசியது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயந்தி, உதவி தலைமை ஆசிரியையான தொண்டாமுத்தூர் பாண்டியன் வீதியை சேர்ந்த தங்கமாரியம்மாள் (47) ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 2 பிரிவுகளின் கீழ், ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கோவையில் பள்ளி மாணவனை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாக பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்