ஆழியாறில் தோட்டத்துக்குள் புகுந்து வளர்ப்பு நாயை அடித்து கொன்ற சிறுத்தை
ஆழியாறில் தோட்டத்துக்குள் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
பொள்ளாச்சி
ஆழியாறில் தோட்டத்துக்குள் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
வளர்ப்பு நாய்
பொள்ளாச்சி அருகே ஆழியாறு ஒட்டக்கரடு பகுதியில் சிறுத்தை ஆடுகளை கடித்து கொன்றது. இதையடுத்து சிறுத்தை பிடிக்க இரு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் கேமரா பொருத்தியும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். ஆனால் அந்த சிறுத்தை கூண்டில் சிக்காமல் வனத்துறையினருக்கு போக்குகாட்டி வருகிறது.
இந்த நிலையில் ஆழியாறு புளியங்கண்டி பகுதியில் ராசு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாயை அவர் தோட்டத்தில் கட்டி வைத்து இருந்தார்.
சிறுத்தை அடித்து கொன்றது
அவர் நேற்று காலையில் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தபோது தான் வளர்த்து வந்த நாய் உயிரிழந்த நிலையில் கிடந்தது. அதன் கழுத்தில் சிறுத்தை கடித்ததற்கான அடையாளங்களும் இருந்தன.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் உயிரிழந்த நாயின் உடலை சோதனை செய்தனர்.
அத்துடன் அங்கு பதிவாகி இருந்த கால்தடத்தை ஆய்வு செய்ததில் சிறுத்தைதான் அந்த நாயை அடித்து கொன்றது உறுதியானது.
பொதுமக்கள் பீதி
ஏற்கனவே இந்த பகுதி அருகே சிறுத்தை நடமாடி வரும் நிலையில் தற்போது புளியங்கண்டி பகுதியிலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
அத்துடன் அவர்கள் சிறுத்தையை கண்காணித்து அதை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தோட்டத்தில் கட்டி வைத்திருந்த வளர்ப்பு நாயை அடித்து கொன்ற சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
மேலும் அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.