பாம்பு பிடிக்கும் தொழிலாளி குத்திக்கொலை மனைவி கைது

நடத்தையில் சந்தேகப்பட்டதால் ஆத்திரத்தில் பாம்பு பிடிக்கும் தொழிலாளியை குத்திக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-05 17:37 GMT
பொள்ளாச்சி

நடத்தையில் சந்தேகப்பட்டதால் ஆத்திரத்தில் பாம்பு பிடிக்கும் தொழிலாளியை குத்திக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பாம்பு பிடிக்கும் தொழிலாளி

பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் வாட்டர் டேங்க் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36). பாம்பு பிடிக்கும் தொழிலாளி. மேலும் இவர் கால்நடைகளுக்கு நாட்டு மருத்துவம் பார்த்து வந்தார். இவரது மகாலட்சுமி (32), தையல் தொழிலாளி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில்  வீட்டில் மார்பு, வயிறு பகுதிகளில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த வினோத்குமாரை அவரது மனைவி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தார்.

 படுகாயத்துடன் உயிருக்கு போராடிய டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

போலீசார் விசாரணை

இது குறித்த வடக்கிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மகாலட்சுமி, தனது கணவர் தன்னை தானே கத்தரிக்கோலால் குத்திக்கொண்டதாக தெரிவித்தார். 

ஆனால் வினோத்குமாரின் உடலில் 5 இடங்களில் பயங்கரமாக குத்தப்பட்டு இருந்ததற்கான அடையாளங்கள் இருந்தன. அதை வைத்து பார்க்கும்போது அவர் தற்கொலை செய்ய தன்னைதானே குத்திக்கொண்டதுபோன்று இல்லாமல் இருந்தது. 

மனைவி கைது

இதன் காரணமாக மகாலட்சுமி மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து போலீசார் மகாலட்சுமியை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது தனது கணவரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் மகாலட்சுமியை கைது செய்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவரை கொலை செய்தது குறித்து மகாலட்சுமி அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:- 

நடத்தையில் சந்தேகம்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வினோத்குமார், மகாலட்சுமி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வினோத் குமார் பாம்பு பிடிப்பதில் மிகவும் கெட்டிக்காரர். ஆனால் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார். 

இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் அவர், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து உதைத்து உள்ளார். இந்த நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த வினோத்குமார், தனது மனைவியை சராமாரியாக தாக்கி உள்ளார். இந்த தகராறு அதிகாலை 5 மணி வரை நீடித்தது. 

குத்திக்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த மகாலட்சுமி தனது வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து வினோத்குமார் மீது சரமாரியாக குத்தினார். இதனால் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 


தனது கணவரை கொலை செய்துவிட்டதால் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று நினைத்த மகாலட்சுமி, இதில் தப்பிக்க யோசனை செய்தார். பின்னர் அவர் கணவர் தன்னைத்தானே கத்தரிக்கோலால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடி உள்ளார். 

இருந்தபோதிலும் போலீசில் சிக்கினார் என்று வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பொள்ளாச்சி அருகே பாம்பு பிடிக்கும் தொழிலாளியை மனைவி குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்