ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது தாக்குதல்
ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள ஆரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி விஜயா. இவர் ஊராட்சி மன்ற தலைவராவார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் ஆரூர் ஊராட்சி மன்ற கட்டிடம் அருகில் உள்ள மரத்தில் மாடுகளை கட்டியதாக தெரிகிறது. இதைபார்த்த ஊராட்சி மன்ற தலைவர் விஜயா மற்றும் ஊராட்சி செயலாளர் கதிரேசன் ஆகியோர் இப்பகுதியில் மாடுகளை கட்டக்கூடாது என கூறியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அண்ணாமலை அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இதை தட்டிக்கேட்ட சண்முகத்தையும் அவர் திட்டி தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.