மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதிய தகராறு; வாலிபர் கத்தியால் குத்திக்கொலை

மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது

Update: 2022-04-05 15:56 GMT
பெங்களூரு: மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது.

நண்பரின் பிறந்தநாள்

பெங்களூரு காட்டன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜெய்மதிநகரில் வசித்து வந்தவர் சந்துரு(வயது 22). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பரான சைமன் என்பவர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நேற்று அதிகாலை சந்துருவும், அவரது நண்பரும் சிக்கன் சாப்பிட ஸ்கூட்டரில் பழைய குட்டதஹள்ளிக்கு சென்றனர். 

அப்போது ஸ்கூட்டர், முன்னால் சென்று கொண்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கும், சந்துருவுக்கும் இடையே தகராறு உண்டானது. இந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த ஒரு கும்பல் சந்துருவை பிடித்து சரமாரியாக தாக்கியது. இந்த சந்தர்ப்பத்தில் அந்த கும்பல் சந்துருவை திடீரென கத்தியால் குத்தியது.

ஆஸ்பத்திரியில் சாவு

இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சந்துருவை அவரது நண்பர் உள்ளிட்ட சிலர் மீட்டு சிகிச்சைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் சந்துரு இறந்து விட்டார். இதுபற்றி அறிந்த ஜே.பி.நகர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சந்துருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதிய தகராறில் சந்துரு கொலை செய்யபட்டது தெரியவந்தது. ஆனால் சந்துருவை கொலை செய்தவர்கள் யார் என்பது உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்