தனபால், ரமேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
தனபால், ரமேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
ஊட்டி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் தடயங்களை அழித்ததாக ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு, ஊட்டியில் தங்கி இருக்க வேண்டும், வாரந்தோறும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது.
அதில் தளர்வு கோரி 3-வது முறையாக ஊட்டி கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா விசாரித்தார். காணொலி காட்சி மூலம் அரசு சிறப்பு வக்கீல் ஷாஜகான் ஆஜராகி, வழக்கு விசாரணை முக்கியமான கட்டத்தில் உள்ளதால் நிபந்தனையில் தளர்வு அளிக்கக் கூடாது என்றுக்கூறி கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.