பெண் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சியடைந்த தந்தை- ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து வந்து அசத்தினார்
பெண் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சியடைந்த தந்தை- ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து வந்து அசத்தினார்
புனே,
புனே அருகே பெண் குழந்தை பிறந்ததை பெருமைப்படுத்தி கொண்டாடிய தந்தை தனது குழந்தையை ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து வந்து அசத்தினார்.
பெண் குழந்தை
பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றி கொன்ற காலமும் இருந்தது. ஆனால், இன்றைய தலைமுறையினர் பலர் பெண் குழந்தையை விரும்பி ஏற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் பெண் குழந்தை பிறந்ததை பெருமைப்படுத்திய சம்பவம் மராட்டிய மாநிலத்தில் நடந்து உள்ளது.
அங்குள்ள புனே மாவட்டம் கேத் தாலுகாவில் உள்ள செல்காவ் பகுதியை சேர்ந்தவர் விஷால் ஜரேகர் (வயது30). வக்கீல். இவரது மனைவிக்கு கடந்த ஜனவரி 22-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதனால் தந்தை விஷால் ஜரேகர் மனமகிழ்ச்சி அடைந்தார். மேலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான வழியை தேடினார்.
ஹெலிகாப்டரில்...
அப்போது தனது மனைவியுடன் குழந்தையை ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. அதன்படி கடந்த 2-ந் தேதி ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தார். போசரி பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் இருந்து, பெண் குழந்தை மற்றும் மனைவியை ஹெலிகாப்டரில் ஏற்றி தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு வசதியாக தனது விவசாய நிலத்தில் தற்காலிக ஹெலிபேடும் அமைத்திருந்தார். இந்த நிகழ்வை அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்தனர்.
இது குறித்து விஷால் ஜரேகர் கூறுகையில், “எங்கள் வீட்டில் நீண்ட காலமாக பெண் குழந்தை பிறக்கவில்லை. தற்போது பெண் குழந்தை பிறந்தது எல்லையில்லா மகிழ்ச்சியை தந்தது. இந்த சந்தோசத்தில் எனது குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்தேன். எனது மகளுக்கு ராஜலட்சுமி என்று பெயர் வைத்துள்ளேன்” என்றார்.
விஷால் ஜரேகரின் இந்த செயலை நேரில் பார்த்தவர்கள் வியப்பு அடைந்தனர். இதைப்பற்றி கேள்விப்பட்டவர்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.