சஞ்சய் ராவத் சொத்துக்கள் முடக்கம்- தேசியவாத காங்கிரஸ் கண்டனம்
சஞ்சய் ராவத் சொத்துக்கள் முடக்கப்பட்டதற்கு தேசியவாத காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.
மும்பை,
சஞ்சய் ராவத் சொத்துக்கள் முடக்கப்பட்டதற்கு தேசியவாத காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.
காழ்புணர்ச்சி அரசியல்
அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு சொந்தமாக தாதரில் உள்ள வீடு மற்றும் அலிபாக்கில் உள்ள நிலங்களை முடக்கி உள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தேசியவாத காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே கூறுகையில், "அரசியல் எதிரிகளின் குரலை ஒடுக்க மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு விசாரணை முகமைகளை தவறாக பயன்படுத்தி வருகிறது. மராட்டியத்தில் என்ன நடக்கிறது?. மராட்டியத்தில் காழ்ப்புணர்ச்சி அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது.
களங்கப்படுத்த முயற்சி
மாநில அரசுக்காகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் பேசியதால் சஞ்சய் ராவத் தொடர்பான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக கூறிய புகார் குறித்து மாநில உள்துறை மந்திரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் அமலாக்கத்துறை அவரது வீடு, சொத்துக்களை முடக்கி உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் மகாவிகாஸ் அகாடி அரசை பா.ஜனதா களங்கப்படுத்த முயற்சி செய்கிறது." என்றார்.
சஞ்சய் ராவத் சமீபத்தில் அமலாக்கத்துறை பா.ஜனதாவின் ஏ.டி.எம். என விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-------------