தூத்துக்குடியில் தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது

தூத்துக்குடியில் தொழிலாளி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-05 12:27 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கூலித் தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கூலித் தொழிலாளி
தூத்துக்குடி தாளமுத்துநகர் சுடலையாபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் பெரியசாமி (வயது 25). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பிராய்லர் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 3-ந் தேதி பெரியசாமி, அவரது நண்பர் ஜெயபால் என்பவருடன் டி.சவேரியார்புரம் பகுதியில் நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபருக்கும், பெரியசாமிக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் பெரியசாமி அந்த வாலிபரை தாக்கியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அந்த வாலிபர் தனது உறவினருடன் வந்து பெரியசாமியிடம் தகராறு செய்தாராம். 
அப்போது பெரியசாமி கீழே விழுந்து தலையில் அடிபட்டதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார்.
2 பேர் கைது
இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தூத்துக்குடி சோட்டையன்தோப்பு காந்தி நகர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் சச்சின், ஆறுமுகம் மகன் வினோத் (21) ஆகியோர் பெரியசாமியை தாக்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தாளமுத்துநகர் போலீசார் சச்சின், வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்