ரூ.17.97 கோடியில் தூண்டில் வளைவு
கோவளம் மற்றும் பெரியநாயகி தெருவில் ரூ.17.97 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்:
கோவளம் மற்றும் பெரியநாயகி தெருவில் ரூ.17.97 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
உயர்மட்ட பாலம்
குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் முடிவுற்ற வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இதில் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளியாற்றின் குறுக்கே முட்டம் சாலையில் இருந்து தலக்குளம் செல்லும் சாலையில் ரூ.2.65 கோடி செலவில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் ஊரக வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 23.80 ஹெக்டேர் இடத்தில் ஊராட்சிகளுக்கான மாவட்ட பயிற்சி மற்றும் பயிலரங்க மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
தூண்டில் வளைவு
அதைத் தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் பெருமாள்புரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி கிராம ஊராட்சிகளுக்கான (2021-2022) திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வேளாண் கருவிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. பெருமாள்புரம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதோடு கோவளம் மற்றும் பெரியநாயகி தெரு பகுதியில் ரூ.17.97 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார். முன்னதாக பெருமாள்புரம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் மகளிர் சுயஉதவிக்குழுவினரால் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சிகளில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பிரின்ஸ் எம்.எல்.ஏ., திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ஏழிசை செல்வி, வட்டார வேளாண்மை ஆலோசனை குழுத்தலைவர் தாமரை பாரதி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அழகேசன், அரசு வக்கீல் மதியழகன், தி.மு.க. மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.