ஆட்டோ டிரைவர் கொலையில் 3 பேர் சிக்கினர்

களியக்காவிளை அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 3 பேர் சிக்கினர்.

Update: 2022-04-04 22:35 GMT
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 3 பேர் சிக்கினர்.
ஆயுதங்களால் தாக்குதல்
குமரி மாவட்டம் எஸ்.டி.மங்காடு பணமுகம் பகுதியை சேர்ந்த அஜின் (26), குளப்புறம் பொன்னப்பா நகர் பாறையடி விளையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஷிஜி (43) ஆகிய 2 பேரும் கடந்த 26-ந் தேதி குளப்புறம் அன்னிகரை பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது காரில் வந்த ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் திடீரென அஜினையும், ஷிஜியையும் பயங்கர ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கினர். பொதுமக்கள் திரண்டு வந்ததால் அந்த கும்பல் தப்பி ஓடியது. அந்த சமயத்தில் அவர்கள் வந்த காரை விட்டு தப்பி சென்றனர்.
ஆட்டோ டிரைவர் சாவு
வெட்டுக்காயத்தால் படுகாயமடைந்த இருவரையும் களியக்காவிளை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ரேஷன் அரிசி கடத்தல் குறித்து ஷிஜியும், அஜினும் போலீசில் தகவல் கொடுத்ததால் கும்பல் அவர்களை ஆயுதங்களால் தாக்கியது தெரியவந்தது.
மேலும் இதுதொடர்பாக மெதுகும்மல் மேற்குவிளை டென்னிஸ் மகன் ஜோஸ் (22), காப்புக்காடு மாராயபுரம் பாறவிளையை சேர்ந்த மகேந்திர குமார் மற்றும் கண்டால் தெரியும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். ஆனால் அவர்கள் போலீசிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஷிஜி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 
3 பேர் சிக்கினர்
இதனை தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். இதற்கிடையே ஷிஜி கொலை தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் 3 பேரை பிடித்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்