போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
நாங்குநேரி அருகே பளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாங்குநேரி:
பணகுடியை சேர்ந்தவர் இசக்கியப்பன் என்ற மஸ்தான். ஒலிபெருக்கி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு மாணவிக்கு வயிறு வலி ஏற்பட்டது. இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அவரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு மீண்டும் வயிறு வலி ஏற்படவே நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்து பார்த்ததில், மாணவி கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. பின்னர் சிறிது நேரத்தில் மாணவிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி நாங்குநேரி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இசக்கியப்பனை கைது செய்தனர்.