ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.
அரியலூர்:
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அரியலூர் நகரில் உள்ள குறிஞ்சி ஏரி பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது ஆகும். இந்த ஏரிக்கரையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பலர் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் கான்கிரீட் கட்டிடங்கள் கட்டி உள்ளனர். இந்நிலையில் நீர் வரும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் ஏரி, குளம், குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக ஏரிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
வீடுகளை அகற்ற நோட்டீஸ்
மேலும் அரியலூர் குறிஞ்சி ஏரிக்கரையில் உள்ள 125 வீடுகளை அகற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது தொடர்பாக தினமும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் செய்து வந்தனர். இதையடுத்து அங்கு குடியிருப்பவர்கள் எம்.எல்.ஏ., அமைச்சர் ஆகியோரை சந்தித்து தங்கள் வீடுகளை இடிக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி நேற்று காலை குறிஞ்சி ஏரிக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் அதிகாரிகள் வந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திரண்டு, தங்களுக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
இதனால் பொதுமக்கள், தங்கள் வீடுகளை இடிக்க முயன்றால் மறியலில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள், மறியலில் ஈடுபடுபவர்களை கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபடும் முடிவில் இருந்த 11 பேரை கைது செய்து, போலீஸ் வேனில் ஏற்றி அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஏரிக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை தொடங்கியது. இதில் போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் எந்திரங்கள் மூலம் வீடுகளை இடிக்கும் பணி நடந்தது. ஏற்கனவே ஒரு சிலர் தங்கள் வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி இருந்தனர். பலர் எந்த பொருட்களையும் அகற்றாமல் வைத்திருந்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடந்தது.
போலீஸ் பாதுகாப்பு
காலை 9 மணியளவில் தொடங்கிய இந்த பணி மாலை வரை நடந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர், மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம், மின்வாரியம் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.