நெல்லையில் விவசாயி குத்திக்கொலை

நெல்லையில் பட்டப்பகலில் விவசாயி கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-04-04 20:51 GMT
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்தவர் முத்துமாலை (வயது 40), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அந்த பகுதியில் உள்ளது. நேற்று மதியம் முத்துமாலை நடுவக்குறிச்சியில் உள்ள ரேஷன் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அவருடைய உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த முருகன் (28), திருத்து பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (45), ஆகியோர் வந்தனர். 2 பேரும் திடீரென முத்துமாலையுடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் கையில் வைத்திருந்த கத்தியால் முத்துமாலையை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முத்துமாலை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

பின்னர் சுப்பிரமணியன், முருகன் ஆகிய 2 பேரும் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தனர். உடனே தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துமாலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் சீனியம்மாள் வந்து தடயங்களை சேகரித்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியன், முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கொலை செய்யப்பட்ட முத்துமாலைக்கும், சுப்பிரமணியன், முருகன் ஆகியோருக்கும் இடையே விவசாய நிலம் சம்பந்தமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முத்துமாலை நடுவக்குறிச்சியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுப்பிரமணியன், முருகன் ஆகியோருக்கும் இடையே மீண்டும் விவசாய நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், முருகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து முத்துமாலையை கத்தியால் குத்திக்கொலை செய்தது, விசாரணையில் தெரியவந்தது.

முத்துமாலை கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. எனவே, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நிலத்தகராறு காரணமாக விவசாயி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்