கிணற்றில் தவறி விழுந்து ஆண் யானை சாவு

கொளத்தூர் அருகே உணவு தேடி வந்த ஆண் யானை கிணற்றில் தவறி விழுந்து இறந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-04-04 20:44 GMT
கொளத்தூர்:-
கொளத்தூர் அருகே உணவு தேடி வந்த ஆண் யானை கிணற்றில் தவறி விழுந்து இறந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
தவறி விழுந்த ஆண் யானை 
தமிழக-கர்நாடக வன எல்லையில் சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்து உள்ளது, லக்கம்பட்டி. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில், திறந்தவெளி கிணறுகள் வெட்டப்பட்டு விவசாய பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று அங்கிருந்த விவசாய கிணற்றின் அருகே சென்றது. 
சுமார் 50 அடி ஆழமுள்ள அந்த விவசாய கிணற்றில் 40 அடி வரை தண்ணீர் நிறைந்திருந்தது. அந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக ஆண் யானை தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து மூழ்கியது. இதில் அந்த யானை பரிதாபமாக இறந்தது.
உடல் மீட்பு
இந்த நிலையில் நேற்று காலை அந்த கிணற்று பகுதிக்கு பொதுமக்கள் சென்றனர். அப்போது கிணற்றில் யானை சறுக்கி விழுந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள், மேட்டூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மேட்டூர் மற்றும் சென்னம்பட்டி வனத்துறையினர், மேட்டூர் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். 
அவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த யானையின் உடலை பொதுமக்கள் உதவியுடன் ராட்சத கிரேனில் கயிறு கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையின் உடல் மீட்கப்பட்டது. 
பின்னர் யானையின் உடல் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது. வனப்பகுதியையொட்டி, யானை இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறாத வண்ணம் அகழிகள் வெட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் லக்கம்பட்டி பகுதியில் அகழிகள் எதுவும் இல்லாததால் இந்த யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்