திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை: மலைவாழ் மக்கள்- வனத்துறை என இரு தரப்பு கருத்தை கேட்டு அரசு முடிவு எடுக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டு உள்ள தடை குறித்து மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறை என இரு தரப்பு கருத்தை கேட்டு அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

Update: 2022-04-04 20:28 GMT
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டு உள்ள தடை குறித்து மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறை என இரு தரப்பு கருத்தை கேட்டு அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். 
கூட்டம்
சத்தியமங்கலத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மலைப்பகுதிகளைக் உள்ளடக்கிய 20 மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.எல்.சுந்தரம், என்.பெரியசாமி, மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் வெங்கடாசலம், மாநில குழு உறுப்பினர் எஸ்.மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மேய்ச்சலுக்கு...
 தமிழ்நாட்டில் வனத்தையொட்டி 20 மாவட்டங்கள் உள்ளன.  இங்கு வனவிலங்குகளும் பாதுகாக்கப்படவேண்டும். மலைவாழ் மக்களும், காப்பாற்ற பட வேண்டும். வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது. 
திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இதன்காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கால் நடைகளை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு மலைவாழ் மக்கள் ஓட்டி செல்ல முடியவில்லை. இதனால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் அரசு ஒரு தரப்பு வாதத்தை மட்டுமே பதிவு செய்து உள்ளதால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 
இரு தரப்பு ஆலோசனைகள்
எனவே மலைவாழ் மக்கள், வனத்துறை என இருதரப்பினரின் எதார்த்தமான கோரிக்கைகளையும் நீதிமன்றத்தில் வக்கீல்கள் முன்வைத்து வாதம் செய்து இருக்க வேண்டும். இதுகுறித்த உரிய தகவலை நீதிமன்றத்துக்கு தெரிவித்திருக்க வேண்டும். இனிமேலாவது இரு தரப்பு ஆலோசனைகளையும் கேட்டு அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். வருகிற 25-ந் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் வனத்துறை மானியக்கோரிக்கை நடைபெற உள்ளது. அப்போது திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு விதித்த தடை குறித்தும், கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு விட மலைவாழ் மக்களுக்கு விதிக்கப்பட்டு உள்ள தடை குறித்தும் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் உரிய தீர்வுகள் காணப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் வருகிற மே மாதம் 9-ந் தேதி 20 மாவட்டங்களில் உள்ள மாவட்ட வன அதிகாரிகள் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்      நடைபெறும்.
இவ்வாறு       அவர் கூறினார்.   கூட்டத்தில் கட்சியின் நகர செயலாளர் ஸ்டாலின் சிவகுமார், ஒன்றிய செயலாளர் சுடர் நடராஜ், 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முருகன், இளைஞர் அணி சரவணன் மற்றும் தமிழகத்தில் வனத்தையொட்டி உள்ள 20 மாவட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்