கோவில் நிலத்தில் குடியிருப்போர் திடீர் போராட்டம்; 40 பேர் கைது

பெண்ணாடம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கோவில் நிலத்தில் குடியிருப்போர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-04 19:13 GMT
பெண்ணாடம், 

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கருங்குழி தோப்பு பகுதியில் உள்ள இடத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு மின்சார வசதி பெறுவதற்காக மனை ரசீது கேட்டு பலமுறை போராட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவில் நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பத்மநாபன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திடீரென கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்பு அடுப்பு வைத்து சமையல் செய்ய தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பெண்ணாடம் வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் சம்பத் மற்றும் பெண்ணாடம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 ஆண்கள், 34 பெண்கள் உட்பட 40 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

மேலும் செய்திகள்