சிறுவனின் மூக்கில் சிக்கிய ரப்பர் வளையம் அறுவை சிகிச்சையின்றி அகற்றம்

சிறுவனின் மூக்கில் சிக்கிய ரப்பர் வளையம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது.

Update: 2022-04-04 17:39 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கீழத்தூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் விஷ்ணு (வயது 5). இவன், கடந்த 2-ந்தேதி விளையாடி கொண்டிருந்த போது ஸ்குரு நட்டிற்கு அடியில் வாஷருக்கு கீழ் வைக்கப்படும் ரப்பர் வளையத்தை வைத்து விளையாடி கொண்டிருந்த போது அதனை எதிர்பாராத விதமாக மூக்கி
ல் வைத்து உறிஞ்சி உள்ளான். 

அந்த ரப்பர் வளையம் சிறுவனின் மூக்கிற்குள் சென்று சிக்கி கொண்டது. இதனால் விஷ்ணுவிற்கு மூக்கில் வலி ஏற்பட்டு உள்ளது. மேலும் முகம் வீக்கம் அடைந்து உள்ளது. இதையடுத்து இளங்கோ அவரது மகன் விஷ்ணுவை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார்.

வலியால் துடித்து கொண்டிருந்த சிறுவனுக்கு காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைவர் டாக்டர் இளஞ்செழியன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். பின்னர் சிறுவனுக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு மூக்கில் சிக்கிய ரப்பர் வளையத்தை அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோப்பி முறையில் அகற்றினர். 

தற்போது சிறுவன் நலமாக உள்ளான். இந்த சிகிச்சையின் போது டாக்டர் ராஜாசெல்வம், மயக்கவியல் நிபுணர் அருளநாதன் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்