எம்பி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிகளின் கீழ் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பணிகளை செயல்படுத்த நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்
எம்.பி.- எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிகளின் கீழ் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பணிகளை செயல்படுத்த நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும் என்று தர்மபுரியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
தர்மபுரி:
எம்.பி.- எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிகளின் கீழ் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பணிகளை செயல்படுத்த நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும் என்று தர்மபுரியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
தொகுதி மேம்பாட்டு நிதி
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி செயலாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.பி.அன்பழகன், ஜி.கே.மணி, கோவிந்தசாமி, சம்பத்குமார், வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
2021-2022-ம் ஆண்டிற்கு எம்.பி. உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியும், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியும் அரசு நிதி ஒதுக்கீடு செய்து திட்ட செயலாக்கம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. எம்.எல்.ஏ.க்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையும் கணக்கில் கொண்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூடுதல் கால அவகாசம்
எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் நிதி ஒதுக்கீட்டிற்கான பணிகளை அரசால் வழங்கப்பட்டுள்ள கூடுதல் கால அவகாசத்திற்குள் விரைந்து செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏதுவாக பணிகளை பரிந்துரை செய்ய வேண்டும். இந்த நிதிகளில் முன்னுரிமை அடிப்படையிலான பணிகள் மற்றும் எம்.எல்.ஏ. விருப்புரிமை பணிகள் மேற்கொள்வதற்கான பணிகளின் பட்டியலை வழங்கலாம்.
எம்.பி.- எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிகளின் கீழ் பரிந்துரைக்கப்படும் பணிகளை அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்தகூட்டத்தில் கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன், தர்மபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுகுமார், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.பின் நேர்முக உதவியாளர் சொல்லின் செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.