இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்

இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-04-04 16:48 GMT
உப்பள்ளி:

உப்பள்ளியில் குடிப்பழக்கம் இருப்பதை அறிந்து திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

 காதல்

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் வித்யா நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், அதேப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருக்கு, ஒசப்பேட்டை பகுதியை சேர்ந்த கிரண் இங்கலிகி(வயது 26) என்பவர் பேஸ்புக்(முகநூல்) மூலம் அறிமுகமாகி நட்பு ஏற்பட்டது.  இருவரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. 

 திருமணத்திற்கு மறுத்ததால்...

இந்த நிலையில் கிரண், மதுபழக்கத்திற்கு அடிமையானவர் என்பது இளம் பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் கிரணிடம் பேசுவதை இளம்பெண் தவிர்த்து வந்தார். இதற்கிடையே வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் திருமணத்திற்கு இளம்பெண் மறுத்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த கிரண், இளம்பெண்ணிடம் என்னுடன் அரைநிர்வாணமாக வீடியோ காலில் பேசிய வீடியோ உள்ளது, அதனை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டல் விடுத்துள்ளார். 

 வாலிபர் கைது

இதனால் பயந்து போன இளம்பெண் உப்பள்ளி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை மிரட்டிய கிரண் இங்கலிகியை கைது செய்தனர். 
மேலும் அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்