தவறவிட்ட செல்போனை வாங்க சென்ற போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை; பெண்கள் உள்பட 3 பேர் கைது
ராமநகர் அருகே தவறவிட்ட செல்போனை வாங்க சென்ற போது ஏற்பட்ட தகராறில் ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்
பெங்களூரு: ராமநகர் அருகே தவறவிட்ட செல்போனை வாங்க சென்ற போது ஏற்பட்ட தகராறில் ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
வாலிபர் கொலை
ராமநகர் மாவட்டம் கோடிபாளையா கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 32). இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. பெங்களூருவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஜெகதீஷ் முதலில் வேலை பார்த்து வந்தார். கொரோனா காரணமாக அவர் வேலை பறிபோனது. அதன்பிறகு, அவர் கோடிபாளையா பகுதியில் வசித்து வந்தார். இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக ஜெகதீசின் மனைவி, தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், குதூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குல்லனஹள்ளி கிராமத்தில் தலையில் பலத்தகாயங்களுடன் ஜெகதீஷ் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தாா். தகவல் அறிந்ததும் குதூர் போலீசார் விரைந்து சென்று ஜெகதீஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
3 பேருக்கு வலைவீச்சு
அப்போது ஜெகதீஷ் தலையில் பலமான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் ஜெகதீஷ் தனது செல்போனை தவறவிட்டுள்ளார். அந்த செல்போனை, குல்லனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கங்கம்மா என்பவர் எடுத்து வைத்திருந்ததாக தெரிகிறது. அந்த செல்போனை வாங்குவதற்காக சென்ற போது ஜெகதீசுக்கும், கங்கம்மாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கங்கம்மா, அவரது உறவினர்களான அனுமந்தகவுடா, நாகரத்தினம்மா ஆகிய 3 பேரும் சேர்ந்து ஜெகதீசை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
தற்போது 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து ஜெகதீஷ் மனைவி கொடுத்த புகாரின்பேரில் குதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தலைமறைவாகி விட்ட கங்கம்மா, நாகரத்தினம்மா, அனுமந்தகவுடாவை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.