ஹர்ஷா கொலை வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கியது
ஹர்ஷா கொலை வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கியது
சிவமொக்கா:
பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா படுகொலை குறித்து என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கி நடந்து வருகிறது.
பஜ்ரங்தள பிரமுகர் படுகொலை
சிவமொக்கா டவுன் சீகேஹட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா(வயது 24). பஜ்ரங்தள பிரமுகரான இவர், கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க சிவமொக்கா டவுனில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். ஹர்ஷா கொலை வழக்கில் 10 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைதொடர்ந்து 10 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
என்.ஐ.ஏ. விசாரணை
ஹர்ஷா கொலை வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. அதன்படி ஹர்ஷா கொலை வழக்கு தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு (என்.ஐ.ஏ.). மாற்றப்பட்டது.
இந்த நிலையில் யுகாதி பண்டிகையான கடந்த 2-ந் தேதி அதிகாரி சண்முகம் தலைமையிலான என்.ஐ.ஏ. குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஹர்ஷா கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் தொடர்பான ஆவணங்களை போலீசாரிடம் இருந்து பெற்று கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.