மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-04 15:59 GMT
திண்டுக்கல்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூதன போராட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் அஜய்கோஸ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சரத்குமார் முன்னிலை வகித்தார்.
முன்னதாக போராட்டம் நடந்த இடத்தில் கியாஸ் சிலிண்டர் மற்றும் ஸ்கூட்டரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கொண்டு வந்து வைத்தனர். பின்னர் அவற்றுக்கு மாலை அணிவித்து, சங்கு ஊதி, மணி அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் மாலையில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும், மொபட்டை பாடை கட்டி தூக்கியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கயிறு கட்டி இழுத்தனர்
இதேபோல் பழனி குளத்து ரவுண்டானா பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி துணைத்தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி பிச்சமுத்து முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆட்டோவுக்கு மாலை அணிவித்து, அதனை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர் ஆத்துமேட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு உறுப்பினர்  சவடமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாணார்பட்டி
சாணார்பட்டி போலீஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் பாப்பாத்தி தலைமை தாங்கினார். இதில், நிர்வாகிகள். வசந்தாமணி, பெருமாள், வெள்ளைக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டியும், ஒப்பாரி வைத்தும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும் நூதன முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் உள்பட ஏராளமானோா கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், ஸ்கூட்டர் மற்றும் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்