ஹிஜாப் விவகாரத்திற்கு மத்தியில் 98.2 சதவீத முஸ்லிம் மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு ஆஜர்; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி
ஹிஜாப் விவகாரத்திற்கு மத்தியில் 98.2 சதவீத முஸ்லிம் மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு ஆஜராகியதாக மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு வருகிற 11-ந் தேதி நிறைவடைகிறது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் அதிகளவில் ஆஜராகிறார்கள். ஹிஜாப் அணியாத மாணவர்களில் 98.7 சதவீதம் பேரும், ஹிஜாப் அணியும் முஸ்லிம் மாணவிகளில் 98.2 சதவீதம் பேரும் தேர்வுக்கு ஆஜராகி வருகிறார்கள்.
தேர்வு தொடங்கிய முதல் நாளில் சில மையங்களில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் தற்போது எந்த பிரச்சினையும் இன்றி தேர்வு நடைபெற்று வருகிறது. ஐகோர்ட்டு தீர்ப்பை ஏற்று பெரும்பாலான மாணவிகள் ஹிஜாப்பை கைவிட்டு தேர்வுக்கு ஆஜராகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக தேர்வுக்கு ஆஜரான அனைத்து மாணவ-மாணவிகளையும் தேர்ச்சி பெற செய்தோம். ஆனால் இந்த முறை முழுமையான அளவில் தேர்வு நடக்கிறது. முதல் நாள் மற்றும் ஆங்கில தேர்வுக்கு சிறிது மாணவர்கள் ஆஜராகவில்லை. துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று நினைத்து கூட மாணவர்கள் ஆஜராகாமல் இருந்திருக்கலாம்.
இவ்வாறு மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.