தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் செங்கல் தயாரிப்புக்கு உலர் சாம்பலை தர வேண்டும்: தயாரிப்பாளர்கள் கோரிக்கை
உலர் சாம்பல் செங்கல் தயாரிப்புக்கு தேவையான சாம்பலை தருமாறு தயாரிப்பாளர்கள் அனல்மின்நிலைய என்ஜினீயரிடம் மனு கொடுத்தனர்
தூத்துக்குடி:
உலர் சாம்பல் செங்கல் தயாரிப்புக்கு தேவையான சாம்பலை தருமாறு தயாரிப்பாளர்கள் அனல்மின்நிலைய என்ஜினீயரிடம் மனு கொடுத்தனர்.
மனு
தென் மாவட்டங்களை சேர்ந்த உலர் சாம்பல் செங்கல் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர்கள் மதுரை சுப்புராம், சரவணன், தூத்துக்குடியை சேர்ந்த லிப்டன் உள்ளிட்டவர்கள் தலைமையில் 108 நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று தூத்துக்குடி அனல் மின்நிலைய தலைமை என்ஜினீயர் கிருஷ்ணகுமாரை சந்தித்தனர். அப்போது உலர் சாம்பல் வழங்குமாறு வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது, ஒரு டன் சாம்பலை ரூ.650 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறும் போது, அனல் மின் நிலையங்களில் நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிக்கும் போது சாம்பல் கழிவுகள் மிச்சமாகும். இந்த சாம்பல் கழிவுகளை அப்படியே கடலில் கொட்டுவதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தினசரி மின்சார உற்பத்தி செய்யும் போது வெளியாகும் சாம்பலில் 20 சதவீதம் அளவு சாம்பல்களை உலர் சாம்பல் செங்கல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்க 1999-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதன்படி சிறு, குறு தொழில் முனைவோர்கள் அனல் மின் நிலையத்தில் இருந்து சாம்பல் கழிவுகளை பெற்று உலர் சாம்பல் செங்கல் தயாரித்து வந்தனர். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உலர் சாம்பல் செங்கல் தயாரிக்கும் சிறு குறு நிறுவனங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் சாம்பல்கள் அனுப்பபட்டன.
நிறுத்தம்
கடந்த 20 நாட்களாக இந்த சாம்பல்கள் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் இந்த தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தி விட்டன. உலர் சாம்பல் செங்கல் தயாரிக்கும் தொழிலை சேர்ந்த 50ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இதனால் இலவசமாக உலர் சாம்பல் தர வேண்டும் என்று கூறினர்.