ஆவடியில் ‘காவலர் வரவேற்பு மேஜை’

ஆவடியில் காவலர் வரவேற்பு மேஜை என்ற நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-04 15:02 GMT
கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் புகார் சம்பந்தமாக போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் முதன் முறையாக ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் அடங்கிய 25 போலீஸ் நிலையங்களிலும் ‘காவலர் வரவேற்பு மேஜை’ என்ற நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், பொதுமக்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வரவேற்பு போலீசாருக்கு அடிப்படை மென்திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரவேற்பு மேஜையில் உள்ள போலீசார் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, வழிகாட்டி அவர்களுக்கு உதவுவார்கள்.

இவ்வாறு ஆவடி போலீஸ் கமிஷனரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆவடி போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துகொண்டு ‘காவலர் வரவேற்பு மேஜை’ அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அத்துடன், போலீசாருக்கு வார விடுப்பு வழங்கும் சி.எல்.ஆப் செயலியை செல்போனில் துவக்கி வைத்தார். அவருடன் போலீஸ் கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர்கள் மகேஷ், உமையாள், உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்