ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக 38 பேரிடம் ரூ.3¼ கோடி மோசடி; ஒருவர் கைது

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக 38 பேரிடம் ரூ.3¼ கோடி மோசடி செய்தவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-04 14:45 GMT
திண்டுக்கல்:
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக  38 பேரிடம் ரூ.3¼ கோடி மோசடி செய்தவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46). தனியார் பள்ளி ஆசிரியர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி (53) என்பவர் அறிமுகமானார். இந்தநிலையில் சுப்ரமணி தனக்கு சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகள் பழக்கம் உள்ளது. அவர்கள் மூலம் அரசு பள்ளிகளில் தன்னால் வேலை வாங்கி தர முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும் அதற்காக ரூ.12 லட்சம் வரை செலவாகும் என்றும் கூறினார். இதனை உண்மை என நம்பிய மாரிமுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவணை முறையில் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் வரை சுப்ரமணியிடம் கொடுத்தார். மீதி பணத்தை வேலை கிடைத்ததும் தருவதாக தெரிவித்தார்.
பணத்தை பெற்றுக்கொண்ட சுப்ரமணி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தார். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை என்று கூறப்படுகிறது.
அப்போது தான் சுப்ரமணி வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது மாரிமுத்துவுக்கு தெரியவந்தது. இதையடுத்து தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கும்படி சுப்ரமணியிடம் மாரிமுத்து கேட்டார். அப்போது அவரை அவதூறாக பேசிய சுப்ரமணி கொலை மிரட்டலும் விடுத்தார்.
ரூ.3¼ கோடி மோசடி
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம், மாரிமுத்து புகார் கொடுத்தார். அந்த புகார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு இமானுவேல் ராஜ்குமாருக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாரிமுத்து, அவருடைய உறவினர்கள் உள்பட 38 பேரிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி சுப்ரமணி ரூ.3¼ கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த மோசடி விவகாரத்தில் சுப்ரமணியுடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்