அமலாக்கத்துறையை வைத்து வாக்காளர்களை பா.ஜனதா மிரட்டுகிறது- நானா படோலே குற்றச்சாட்டு
இடைத்தேர்தல் தோல்வி பயம் காரணமாக அமலாக்கத்துறையை வைத்து வாக்காளர்களை மிரட்ட பா.ஜனதா முயற்சி செய்வதாக காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம்சாட்டினார்.
மும்பை,
இடைத்தேர்தல் தோல்வி பயம் காரணமாக அமலாக்கத்துறையை வைத்து வாக்காளர்களை மிரட்ட பா.ஜனதா முயற்சி செய்வதாக காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம்சாட்டினார்.
இடைத்தேர்தல்
கோலாப்பூர் வடக்கு மாவட்ட எம்.எல்.ஏ.வாக இருந்த சந்திரகாந்த் ஜாதவ் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் காலியாக உள்ள இந்த தொகுதியில் கடந்த ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மகா விகாஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெயஸ்ரீ ஜாதவ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சத்யஜித் கதம் களம் இறக்கப்பட்டார்.
வாக்காளர்களுக்கு பணம்
இந்தநிலையில் சமீபத்தில் பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் வெளியிட்ட அறிக்கையில், “இந்த தேர்தலில் ஓட்டு பதிவு செய்ய வாக்காளர்களின் ஒரு பகுதியினர் டிஜிட்டல் தளம் மூலம் தங்கள் கணக்குகளில் பணம் பெற்று இருக்கிறார்கள். இது தொடர்பாக அமலாக்கத்துறையிடம் புகார் செய்ய உள்ளேன். இதுபோன்று பணத்திற்கு ஆசைப்பட்டு விசாரணை முகமைகளின் நடவடிக்கைகளுக்கு வாக்காளர்கள் ஆளாக வேண்டாம்” என தெரிவித்திருந்தார்.
இதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே, சந்திரகாந்த் பாட்டீலை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அச்சுறுத்தல்
பா.ஜனதா முன்பு தனது அரசியல் எதிரிகளை குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி வந்தது. இப்போது மேலும் முன்னேறி வாக்காளர்களை அச்சுறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது. பா.ஜனதா தொடர் தோல்வியை பார்த்துக்கொண்டு இருப்பதால் அவர்கள் சாமானிய மக்களை அச்சுறுத்த தொடங்கி விட்டனர்.
அமலாக்கத்துறை பா.ஜனதாவின் கிளை அமைப்பு போல செயல்படுகிறது. மராட்டியத்தில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியாத விரக்தியால் சந்திரகாந்த் பாட்டீல் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே, சந்திரகாந்த் பாட்டீலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், கோலாப்பூர் வடக்கு தேர்தலில் தோல்வியை உணர்வதால் அவர் இவ்வாறு பேசுகிறார் எனவும் தெரிவித்தார்.