ஆற்காடு அருகே கிணற்றில் பிணமாக கிடந்த பெண் கொலை செய்யப்பட்டது அம்பலம்
ஆற்காடு அருகே கிணற்றில் பிணமாக கிடந்த பெண், கள்ளக்காதல் தகராறில் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அவருடைய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு
ஆற்காடு அருகே கிணற்றில் பிணமாக கிடந்த பெண், கள்ளக்காதல் தகராறில் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அவருடைய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் பிணமாக கிடந்த பெண்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பெரியகுக்குண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 36). கடந்த 30-ந் தேதி மகேஸ்வரி ராணிப்பேட்டையை அடுத்த தகரகுப்பம் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது கணவர் ஜெய்சங்கர் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பெரியகுக்குண்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மகேஸ்வரி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபரிடம் விசாரணை
மகேஸ்வரியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி ஜெய்சங்கர் மற்றும் மகேஸ்வரியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தாலுகா போலீஸ் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் மகேஸ்வரி சாவில் சந்தேகத்தின்பேரில் அதேப்பகுதியை சேர்ந்த கட்டிட வேலை செய்யும் பிரபு (வயது 27) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மகேஸ்வரியை பிரபு கொலை செய்தது தெரியவந்தது.
அதன் விவரம் வருமாறு:-
கிணற்றில் தள்ளி கொலை
பிரபுவிற்கும், மகேஸ்வரிக்கும் கடந்த 6 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பிரபுவிற்கு திருமணம் நடைபெற்றது. இதனால் பிரபு மகேஸ்வரியுடன் பழகுவதை குறைத்துக் கொண்டுள்ளார். இதற்கிடையில் மகேஸ்வரிக்கு பழையனூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட வேலை செய்யும் அருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 30-ந் தேதி பெரியகுக்குண்டியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே மகேஸ்வரி, அருணுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பிரபு இதை பார்த்து மகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றி பிரபு, மகேஸ்வரியின் தலையில் கருங்கல்லால் அடித்துள்ளார். பின்னர் அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரியை கொலை செய்த வழக்கில் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.