மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம் இன்று நடக்கிறது
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
மன்னார்குடி:-
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
ராஜகோபாலசாமி கோவில்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில் மூலவராக பரவாசுதேவப்பெருமாள் அருள்பாலிக்கிறார். உற்சவராக ராஜகோபாலசாமி அருள்பாலிக்கிறார். செங்கமலத்தாயார், செண்பகலட்சுமி ஆகிய பெயர்களில் தாயார் அருள்பாலிக்கிறார்.
பங்குனியில் பிரம்மோற்சவம், சித்திரை, வைகாசியில் கோடை உற்சவம், ஆடிப்பூரம், நவராத்திரி, மாசியில் ராஜகோபாலசாமிக்கு ஊஞ்சல் உற்சவம் என ஆண்டு முழுவதும் இக்கோவில் திருவிழா கோலம் பூண்டிருக்கும்.
வெண்ணெய் தாழி உற்சவம்
இதில் பங்குனி பிரம்மோற்சவம் 18 நாட்கள் நடைபெறும். இதன் 16-ம் நாளில் வெண்ணெய் தாழி உற்சவம் நடக்கிறது. இந்த உற்சவத்தின்போது ராஜகோபாலசாமி குழந்தை போல் தவழும் கோலத்தில் (நவநீத சேவை) கையில் வெண்ணெய் குடத்துடன் வீதி உலா வருவார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் சாமி மீது வெண்ணெய் வீசி வழிபடுகிறார்கள்.
வழக்கம்போல் இந்த ஆண்டு பங்குனி பிரம்மோற்சவம் கடந்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான வெண்ணெய் தாழி உற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் நவநீத சேவையில் ராஜகோபாலன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
தங்க குதிரை வாகனம்
வெண்ணெய் தாழி உற்சவத்தை தொடர்ந்து இரவில் தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் ராஜகோபாலசாமி காட்சி தருகிறார். நாளை (புதன்கிழமை) 17-ம் நாள் திருவிழாவாக தேரோட்டம் நடக்கிறது.
பங்குனி உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக கோவிலுக்கு அருகில் உள்ள கிருஷ்ண தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.