திருச்சி மாநகராட்சியின் வருவாய் ரூ.100 கோடி அதிகரிக்க வாய்ப்பு

திருச்சி மாநகராட்சியின் வருவாய் ரூ.100 கோடி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-04-03 22:19 GMT
திருச்சி:

சொத்துவரி உயர்வு
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, திருச்சி மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டு (2022-2023) முதல் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட உள்ளது.
மாமன்றத்தில் தீர்மானம்
தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. மேலும், தற்போதைய சீராய்வு அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளைப் பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின் தீர்மானம் பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி வருவாய் உயரும்
திருச்சி மாநகராட்சியில் தற்போது ஏ, பி, சி என்று 3 வகைகளில் சொத்துவரி வசூல் செய்யப்படுகிறது. பிரதான சாலையில் அமைந்துள்ள பகுதி, பிரதான சாலை அருகே அமைந்துள்ள பகுதி, பிரதான சாலையில் இருந்து தொலைவில் உள்ள பகுதி என்று பிரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக தற்போது குறைந்த பட்சமாக 600 சதுர அடி வீட்டுக்கு ரூ.204 வரி வசூல் செய்யப்படுகிறது என்றால் சீராய்வுக்கு பிறகு இது ரூ.255 ஆக உயரும்.
அதேபோல் 600 சதுர அடி வீட்டுக்கு தற்போது அதிகபட்சமாக ரூ.972 வரி வசூல் செய்யப்படுகிறது என்றால் சீராய்வுக்கு பிறகு இது ரூ.1,215 ஆக உயரும். திருச்சி மாநகராட்சியின் வரி வருவாய் ஆண்டுக்கு சராசரியாக ரூ.300 கோடி முதல் ரூ.340 கோடி என்றால், சொத்துவரி உயர்த்தப்படுவதால் நடப்பு நிதியாண்டில் மாநகராட்சியின் வருவாய் ரூ.100 கோடிக்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்