மாநில கபடி போட்டி
மாநில அளவிலான கபடி போட்டியில் சேலம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.
தேவூர்:-
தேவூர் அருகே பாலிருச்சம்பாளையம் பகுதியில் இளந்தென்றல் கபடி குழு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 48 அணிகள் கலந்து கொண்டன. சிறப்பு அழைப்பாளர்களாக சங்ககிரி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ், ஒன்றிய கவுன்சிலர் செங்கோடன், தேவூர் பேரூராட்சி தலைவர் தங்கவேல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். 2 நாட்கள் நடைபெற்ற போட்டிகள் முடிவில் சேலம் சாமி அகாடமி குழு சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. கிருஷ்ணகிரி மாவட்ட அணி 2-வது இடத்தையும், பாலிருச்சம்பாளையம் இளந்தென்றல் கபடி குழு அணி 3-ம் இடத்தையும், மெய்யனூர் மெயின் பறவை குழு 4-ம் இடத்தையும் பிடித்தது, இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை, பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதில் முதலிடம் பிடித்த சேலம் சாமி அகாடமி கபடி குழுவினருக்கு சங்ககிரி 3-வது வார்டு ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் செங்கோடன், சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசை வழங்கினார். 4-ம் இடத்தை பிடித்த அணியினருக்கு தி.மு.க. பிரமுகர் முருகேசன் சுழற்கோப்பை, பரிசுத்தொகை வழங்கினார். கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை பாலிருச்சம்பாளையம் இளந்தென்றல் கபடி குழுவினர் செய்திருந்தனர்.