வாலிபர் கொலையில் 2 பேர் கைது; சட்டை காலரை வைத்து துப்பு துலக்கிய போலீசார்
விஜயநகர் அருகே வாலிபர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டை காலரை வைத்து போலீசார் துப்பு துலக்கி உள்ளனர்.
விஜயநகர்:
வாலிபர் கொலை
விஜயநகர் மாவட்டம் கம்பளி தாலுகா வித்தலாபூர் மலைப்பகுதியில் கடந்த 19-ந் தேதி உடல்கருகிய நிலையில் ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். அவரை யாரோ கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து கம்பளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில் கொலையான வாலிபர் அணிந்திருந்த சட்டை காலரில் ஒரு தையல் கடையின் பெயர் இருந்தது.
இதனால் அந்த சட்டை காலர் மூலம் போலீசார் துப்பு துலக்கினர். அந்த சட்டை காலரில் இருந்த தையல் கடைக்கு சென்று போலீசார் விசாரித்த போது, கொலை செய்யப்பட்ட வாலிபர் கொப்பல் மாவட்டம் கங்காவதி டவுனை சேர்ந்த அமரேஷ் (வயது 30) என்பதும், அவர் அரிசி ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அமரேசுக்கு ஒரு கொலை வழக்கில் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது.
கொன்று உடல் எரிப்பு
இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் கங்காவதியை சேர்ந்த கிரண்குமார், ரேவணசித்தப்பா ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கிரண்குமாரின் சகோதரர் கொலையில் அமரேசுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்ததால் அமரேசுக்கும், கிரண்குமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்து உள்ளது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த கிரண்குமார், தனது உறவினரான ரேவண சித்தப்பா என்பவருடன் சேர்ந்து அமரேசை வித்தலாப்பூருக்கு அழைத்து சென்று கொலை செய்து உடலை எரித்ததும் தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேர் மீதும் கம்பளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.