தேரோடும் வீதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணி மும்முரம்

தஞ்சையில் தேரோடும் வீதிகளில் தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-04-03 19:55 GMT
தஞ்சாவூர்:-

தஞ்சையில் தேரோடும் வீதிகளில் தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்

தஞ்சை மாநகரில் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கீழராஜவீதி ஆகியவை முக்கிய வீதிகளாக திகழ்கின்றன. இந்த வீதிகளில் உள்ள வடிகால்கள் மீது கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் வடிகால்களில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு மழை காலங்களில் வீதிகளில் மழை தண்ணீருடன் கழிவுநீரும் கலந்து செல்கிறது.
இதன்காரணமாக வடிகால்கள் மீது கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை தாங்களே முன்வந்து அகற்ற வேண்டும் என அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி ஆக்கிரமிப்பு கட்டிடங்களை தாங்களாகவே மக்கள் அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் புதிதாக வடிகால் கட்டப்பட்டு வருகிறது.

தேரோடும் வீதிகளில் தார் சாலை

இந்தநிலையில் தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழாவையொட்டி வருகிற 13-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. தஞ்சை மேலவீதியில் உள்ள தேர் மண்டபத்தில் இருந்து புறப்படும் தேர் 4 வீதிகளிலும் வலம் வரும். இதனால் இந்த 4 வீதிகளிலும் புதிய தார் சாலை போட வேண்டும் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து தேரோடும் 4 வீதிகளிலும் தார்சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் தஞ்சை மேலவீதியில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. தார்சாலை தரமாக போடப்படுகிறதா? என மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன் ஆய்வு மேற்கொண்டார். தார் சாலை போடுவதையொட்டி மேலவீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. 2 சக்கர வாகனங்கள் வழக்கம்போல் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘4 வீதிகளில் வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் புதிதாக வடிகால் கட்டப்பட்டு வருகிறது. தற்போது தேரோட்டத்திற்காக தார்சாலை அமைக்கப்படுகிறது. தேரோட்டம் முடிந்த பிறகு 4 வீதிகளிலும் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன் வடிகால்கள் கட்டப்பட்டு மீண்டும் தார்சாலை முழுமையாக அமைக்கப்படும்’ என்றனர்.

மேலும் செய்திகள்