கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; கொத்தனார் பலி

திருவேங்கடம் அருகே காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் கொத்தனார் பலியானார்.

Update: 2022-04-03 19:41 GMT
திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் கொத்தனார் பலியானார்.

கொத்தனார்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள அ.கரிசல்குளம் ஆலடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதுரகிரி மகன் சுந்தர்ராஜ் (வயது 45), விவசாயி.

இவர், கொத்தனார் வேலை பார்த்து வந்த தனது நண்பரான அழகாபுரியை சேர்ந்த மாரியப்பன் மகன் ராமர் (30) என்பவருடன் நேற்று சங்கரன்கோவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அ.கரிசல்குளம் அருகே காலனிக்கு கீழ்ப்புறம் உள்ள ஒரு ஊருணி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த காரும், இவர்களது மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

பரிதாப சாவு

இதில் சுந்தர்ராஜ், ராமர் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ராமர் பரிதாபமாக இறந்தார். சுந்தர்ராஜ் பலத்த காயமுடன் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த தென்காசி மேலகரம் எஸ்.பி.ஐ. காலனியைச் சேர்ந்த முருகன் (50) என்பவர் மீது திருவேங்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன ராமருக்கு வைதேகி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்